பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்... 2027 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு

ஐபிஎல் ஏலத்தில் அமீரின் பெயர் இடம்பெறுமா என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்... 2027 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு
Published on

லண்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளார். இதன் மூலம், 2027-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த பல ஆண்டுகளாக எந்த பாகிஸ்தான் வீரரும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள அமீர், இங்கிலாந்து வீரராக தனது பெயரை ஐபிஎல் ஏலப் பட்டியலில் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருந்த முன்னாள் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் அசார் மஹ்மூத் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். அவர் 2012 மற்றும் 2013 சீசன்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும், 2015-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.

34 வயதான அமீர், சர்வதேச கிரிக்கெட்டில் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 271 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில், பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் உடன் ஒப்பிடப்படும் அளவுக்கு திறமையான வேகப்பந்து வீச்சாளராக கருதப்பட்டார்.

ஆனால், 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பாட்-பிக்சிங் சர்ச்சையில் சிக்கியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. திட்டமிட்டபடி நோ-பால்கள் வீசியதாக அமீர், முகமது ஆசிப் மற்றும் சல்மான் பட் ஆகியோர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐசிசி தடை விதித்ததுடன், பிரிட்டிஷ் நீதிமன்றமும் சிறைத் தண்டனை வழங்கியது.

தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள நிலையில், 2027-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அமீரின் பெயர் இடம்பெறுமா என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com