

இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும் , முன்னாள் கேப்டனுமான அஜிங்க்ய ரஹானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 38 வயதான ரஹானே, தனது சமூக வலைதளப் பதிவில் இது குறித்து கூறியிருப்பதாவது: "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக இதுவே சரியான நேரம் என்று நான் உணர்கிறேன். எனவே, அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ரகானே, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். கடைசியாக, 2023-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் தேசிய அணியில் இடம்பெறவில்லை.
தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்த ரஹானே, 2024–25 சீசன் வரை மும்பை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். அஜிங்க்யா ரகானேவின் ஓய்வு அறிவிப்பு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் ரகானே விளையாடுவார் எனத்தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளில் தற்போது கொல்கத்தா அணிக்காக ரகானே விளையாடி வருகிறார்.