

கொல்கத்தா,
2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின .
அதன்படி, முதல் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தற்போது நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் எய்டென் மார்க்ரம் களமிறங்கினர். இதில் டி காக் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 10(8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். தொடர்ந்து களமிறங்கிய ரைன் ரிக்கெல்டனும் முதல் பந்திலே அவுட்டானார்.
பின்னர் மார்க்ரமுடன் பிரெவிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆட அணியின் ஸ்கோர் 50-ஐ கடந்தது. இதற்கிடையில், மார்க்ரம் 18(20) ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த மில்லரும் 6(6)ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார். ஒருபுறம் நிதானமாக ஆடிய பிரெவிஸும் 34(27) ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 150-ஐ கடந்தநிலையில், ஸ்டப்ஸ் 29(24) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சன் அரைசதம் கடந்து அசத்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் ஆட்டமிழக்காமல் 55(30)ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் கோல் மெகான்சி, மாட் ஹென்றி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாடியது. தொடக்க வீரர்களாக டிம் சைபராட் , பின் ஆலன் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர்.
பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதமடித்து அசத்தினர். டிம் சீபராட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த பின் ஆலன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இதனால் 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 173 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.