ரூ. 24.75 கோடிக்கு வாங்கப்பட்டபோது பலரும் கிண்டலடித்தாலும்...- ஆட்ட நாயகன் ஸ்டார்க்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

சென்னை,

17-வது ஐ.பி.எல். சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்து வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆரம்பத்திலேயே வெற்றியை தாரை வார்த்தது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 114 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் 51, குர்பாஸ் 39 ரன்கள் அடித்து 10.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

மறுபுறம் 2012, 2014-க்கு பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா அணி சென்னை மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு 3 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய மிட்சேல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். ரூ. 24.75 என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட அவர் லீக் சுற்றில் சொதப்பினாலும் நாக் அவுட் போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் ரூ. 24.75 கோடிக்கு வாங்கப்பட்டபோது பலரும் தம்மை கிண்டலடித்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை வைத்து ஐபிஎல் தொடரிலும் அசத்தியதாக ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"கொல்கத்தா அணிக்கு அற்புதமான இரவு. என்ன ஒரு அற்புதமான போட்டி. அற்புதமான சீசன். 2 சுவாரசியமான அணிகள் மோதிய பைனல் நன்றாக இருந்தது. எங்களிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் கொண்ட அணி இருந்தது. எங்களுடைய பயிற்சியாளர் குழுவினர் அனைத்து வீரர்களின் உச்சகட்ட செயல்பாடுகளை கொண்டு வந்தனர். அதனால் தொடர்ந்து அசத்திய எங்கள் அணியில் ஒவ்வொருவரும் பங்காற்றினர். டாஸ் தோல்வியை சந்தித்ததால் முதலில் பவுலிங் செய்யும் வாய்ப்பை பெற்றோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த போட்டியை பார்த்தபோது பிட்ச் என்ன செய்யும் என்பது தெரியாமல் இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் தனது பவுலர்களை சிறப்பாக பயன்படுத்தி பீல்டிங் செய்தார். அவருக்கு வெற்றிக்கான பாராட்டுக்கள். என்னுடைய சம்பளம் பற்றி பலரும் கிண்டலடித்தனர். இருப்பினும் என்னுடைய அனுபவம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய உதவியது. எனவே நான் வயதுடன் அனுபவத்தை கொண்டிருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்கள்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com