ஐபிஎல் 2027: கேகேஆர் கேப்டனாக ரிங்கு சிங்? - இந்திய முன்னாள் வீரர் பரிந்துரை

ரிங்குவுக்கு, அடுத்த சீசனில் கேப்டன் பொறுப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
 ரிங்கு சிங்
Published on: 

புதுடெல்லி,

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் புதிய கேப்டனாக ரிங்கு சிங்கை நியமிக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யோசனை தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவிக்கு ரிங்கு சிங்

3 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2026 சீசனில் 7-வது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது. அந்த அணியின் கேப்டனாக இருந்த அஜிங்க்யா ரஹானே, ஜூலை மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதனால் அடுத்த சீசனுக்குப் புதிய கேப்டனைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை கேகேஆர் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2027 வீரர்கள் ஏலத்துக்கு முன்பாக, பேசிய ஆகாஷ் சோப்ரா, ரிங்கு சிங்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரிங்குவையே தேர்வு செய்வேன்

இதுகுறித்து அவர் கூறுகையில், "ரிங்குவை கேப்டனாக நியமியுங்கள். ஏற்கெனவே அவரை துணைக் கேப்டனாக நியமித்தீர்கள் அல்லவா? இப்போது அவரிடமே கேப்டன் பொறுப்பைக் கொடுங்கள். அவர் உத்தரப் பிரதேச டி20 தொடரில் தனது அணியை வழிநடத்துகிறார். சில நேரங்களில் ஒருவருக்கு பெரிய பொறுப்பைக் கொடுத்து, அவர் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஏலத்தில் வேறு பொருத்தமான வீரர் கிடைத்தால் பரிசீலிக்கலாம். அப்படி யாரும் கிடைக்காவிட்டால், வெளிநாட்டு வீரரைத் தேடுவதற்குப் பதிலாக நான் ரிங்குவையே தேர்வு செய்வேன்" என்றார்.

ரூ.43.2 கோடியை விடுவிக்கலாம்

கேகேஆர் அணியில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா ஆகிய இருவரையும் விடுவிக்கலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கேமரூன் கிரீன் ரூ.25.2 கோடிக்கும், பதிரானா ரூ.18 கோடிக்கும் வாங்கப்பட்டவர்கள். இருவரையும் விடுவித்தால், அவர்களுக்காகச் செலவிட்ட ரூ.43.2 கோடி தொகையை ஏலத்தில் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து சோப்ரா கூறுகையில், "கிரீனை விடுவித்துவிட்டு, மீண்டும் ஏலத்தில் வாங்க நினைத்தாலும் அவரை குறைந்த விலைக்கே வாங்க முடியும். பதிரானாவும் காயம் காரணமாக அதிக போட்டிகளில் விளையாடவில்லை. இந்த இருவரையும் விடுவித்தால் கேகேஆர் அணியிடம் ஏலத்தில் அதிக தொகை இருக்கும்" என்றார்.

அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர் நடைபெறவுள்ளதால், கிரீன் ஐபிஎல் போட்டிகளில் எத்தனை ஆட்டங்களில் விளையாடுவார் என்பதில் சந்தேகம் இருப்பதாக சோப்ரா குறிப்பிட்டார். மேலும், காயம் காரணமாக பதிரானா கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்தப் போட்டியிலும் 1.2 ஓவர்கள் வீசிய பிறகு காயத்தால் வெளியேறினார்.

மேலும், வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அடுத்த சீசனில் விளையாட முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், அவர் விளையாட அனுமதி கிடைத்தால் அணியில் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் சோப்ரா தெரிவித்தார்.

கோப்பை வென்ற ரிங்கு

ரிங்கு சிங்கின் கேப்டன்சி திறமைக்கு ஆதாரமாக உத்தரப் பிரதேச டி20 தொடரில் அவர் பெற்ற வெற்றியையும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார்.

2026-ம் ஆண்டு உத்தரப் பிரதேச டி20 தொடரில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ரிங்கு, அந்த அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்தார். இறுதிப்போட்டியில் லக்னோ பால்கன்ஸ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் மீரட் அணி வீழ்த்தியது.

ஐபிஎல் 2026 தொடரில் கேகேஆர் அணியின் துணைக் கேப்டனாக இருந்த ரிங்குவுக்கு, அடுத்த சீசனில் கேப்டன் பொறுப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

X