சஞ்சு சாம்சனை வாங்க திட்டமா..? - சிஎஸ்கே மூத்த அதிகாரி தகவல்

சஞ்சு சாம்சன் அடுத்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற உள்ளதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.

முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் அவர் அடுத்த சீசனுக்கு (2026) முன்னதாக ராஜஸ்தான் அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. அதன்படி சஞ்சு சாம்சனை ராஜஸ்தான், சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் முறையில் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அதிரடி ஆல் ரவுண்டர் ஷிவம் துபே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை கேட்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் சஞ்சு சாம்சனை நாங்கள் வாங்க பார்ப்பது உண்மைதான் என்று சிஎஸ்கே மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் நிச்சயமாக சஞ்சுவைப் பார்க்கிறோம். அவர் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க ஆட்டக்காரர். எனவே அவர் கிடைத்தால், அவரை எங்கள் அணியில் நிச்சயமாக சேர்ப்போம். ஆனால் அவருக்காக யாரை விட்டுக்கொடுப்பது என்பது குறித்து நாங்கள் முடிவெடுக்கவில்லை, ஏனெனில் விஷயம் அவ்வளவு தூரம் செல்லவில்லை. ஆனால் கொள்கையளவில், நாங்கள் ஆர்வமாக உள்ளோம்" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com