சுழற்பந்து வீச்சுக்கு திணறலா...? நியூசிலாந்து வீரர்களை பற்றி போட்டுடைத்த நெட் பவுலர்

ஜடேஜாவுக்கு எதிராக தயாராவதற்காக முதலில் 18 யார்டுகள் தொலைவில் இருந்து பந்து வீசும்படி நெட் பவுலர் ஷாஷ்வத்திடம் நியூசிலாந்து வீரர் கூறியுள்ளார்.
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்து வீச்சுக்கான பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு நெட் பவுலராக செயல்பட்ட ஷாஷ்வத் திவாரி, அந்நாட்டு வீரர்களின் பயிற்சி முறைகளை பற்றிய சில விசயங்களை கூறியுள்ளார். பொதுவாக நெட் பவுலர் என்பவர், பயிற்சியின்போது பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என இரண்டிலும் அணிக்கு உதவியாக செயல்படும் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.
ஆனால், இவர்கள் அதிகம் வெளியில் தெரிவதில்லை. பல்வேறு பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசுவார்களோ அதுபோன்று பந்துகளை வீசி, போட்டிக்கு அணி வீரர்களை தயார் செய்ய உதவும் பணியை செய்பவர்கள் ஆவர்.
ஷாஷ்வத்துக்கு, நியூசிலாந்து அணி வீரர்களுக்கு பந்து வீசும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. அப்போது அவர்களின் ராஜதந்திர விவரங்களை பற்றி எடுத்து கூறியுள்ளார். இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தங்களை செழுமைப்படுத்தி கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர் என கூறியுள்ளார். அவர்களை எதிர்கொள்ள சற்று திணறினர் என்றும் கூறுகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ஜடேஜாவுக்கு எதிராக தயாராவதற்காக முதலில் 18 யார்டுகள் தொலைவில் இருந்து பந்து வீசும்படி என்னிடம் கேட்டு கொண்டனர். ஏனெனில் அந்த தொலைவில் அவருடைய வேகம் எந்த அளவில் இருக்கும் என்பதற்கு ஏற்ப தயாராவதற்காக. அந்த வேகம் வேண்டும் என்பதற்காக அப்படி வீசும்படி கூறினார்கள்.
நாங்களும் சிறப்பான முறையில் பந்து வீசினோம். ஆனால், பந்து விரைவாக வருகிறது என உணர்ந்த அவர்கள், 22 யார்டுகள் தொலைவில் இருந்து வீசும்படி என்னிடம் கூறினார்கள் என்றார்.
அவர்கள் இடதுகை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தங்களை தயார்படுத்தி கொண்டனர். அவர்கள் பந்துகளை எதிர்கொள்ள போராடுகிறார்கள் என நான் கூறமாட்டேன். நம்முடைய அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு இணையாக ஈடுகொடுப்பார்கள் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் அதிரடியாக பந்து வீசும் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியும் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற பெரிதும் உதவினார். இது போன்றதொரு அணியுடன் இந்தியா, நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது.






