

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரில் அபாரமாக விளையாடி 160 ரன்கள் குவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்தச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். 168 பந்துகளைச் சந்தித்த ஆர்யவீர் 17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என மொத்தம் 160 ரன்கள் விளாசினார். இது இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் சதமாகும்.
இந்தப் போட்டிக்கு முன்பாகவே தனது தந்தை வீரேந்திர சேவாக்கிடம் பெரிய ரன் எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்ததாக ஆர்யவீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இன்றைய போட்டியில் பெரிய ரன் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒருவரிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். அது எனது தந்தைதான். அவரிடம் பெரிய சதம் அடிப்பேன் என்று கூறியிருந்தேன். எனது தந்தைக்கு பெரிய சதங்கள்தான் பிடிக்கும். எனவே, அவரது கிரிக்கெட் பாரம்பரியத்தைத் தொடர வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் தொடக்கத்தில் ஆர்யவீர் மிகவும் நிதானமாக விளையாடினார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், அவசரப்படாமல் நீண்ட நேரம் பேட்டிங் செய்யத் திட்டமிட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆர்யவீரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. அவருடன் இணைந்து விளையாடிய வி.கே. வினீத் 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதையடுத்து 310 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் இஷான் சூட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.