’’அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி’’ - ஆர்யவீர் சேவாக்

இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆர்யவீர் சேவாக்
Published on: 

அல் அமராத்,

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 160 ரன்கள் விளாசிய இந்திய வீரர் ஆர்யவீர் சேவாக், போட்டிக்கு முன்பாக தனது தந்தை வீரேந்திர சேவாக்கிடம் பெரிய சதம் அடிப்பதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அப்பாவிடம் கொடுத்த வாக்குறுதி

இன்று நடைபெற்ற இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஆர்யவீர், 168 பந்துகளில் 17 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 160 ரன்கள் குவித்தார். அவரது சிறப்பான ஆட்டத்துக்காக ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஆர்யவீர், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் தொடக்கத்தில் சவால்களை சந்தித்ததாகக் கூறினார். இருப்பினும், நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிவித்தார்.

பெரிய சதங்கள்தான் பிடிக்கும்

தனது 160 ரன்கள் குறித்து பேசிய ஆர்யவீர், "இன்று பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஒருவரிடம் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த நபர் எனது அப்பா வீரேந்திர சேவாக்தான். அவரிடம் பெரிய சதம் அடிப்பேன் என்று கூறியிருந்தேன். அவருக்குப் பெரிய சதங்கள்தான் பிடிக்கும். எனவே, அவருடைய பெயருக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதை செய்ததில் மகிழ்ச்சி" என்றார்.

இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு

இப்போட்டியில் ஆர்யவீரின் 160 ரன்கள் மற்றும் வி.கே. வினீத்தின் 67 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 309 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

X