ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமனை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

பாகிஸ்தான் அணியில் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஓமன் அணி திணறியது.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஓமன் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக சைம் அயூப் மற்றும் சாஹிப்சாதா பர்ஹான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாஹிப்சாதா பர்ஹான் 29 ரன்னிலும், சைம் அயூப் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த முகமது ஹாரிஸ் 66 ரன், ஹசன் நவாஸ் 9 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து பக்கார் ஜமான் மற்றும் முகமது நவாஸ் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது.
பாகிஸ்தான் அணியில் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஓமன் அணி திணறியது. அந்த அணியில் மூவரை தவிற மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஓமன் அணி 16.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 67 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.






