ஆசிய கோப்பை: ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கிய பாக்.-யுஏஇ ஆட்டம்.. காரணம் என்ன தெரியுமா..?

image courtesy:twitter/@ACCMedia1
யுஏஇ அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு அரங்கேறிய ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த அமீரக கேப்டன் வாசீம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பஹர் ஜமான் அரைசதம் அடித்தார். யுஏஇ தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், சிம்ரன் ஜீத் சிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
முன்னதாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதற்கான காரணம் என்னவெனில், இந்த தொடரில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கவனத்துக்கு எடுத்துச் சென்றது.
அத்துடன் ‘டாஸ்’ போடும் போது, தங்கள் அணியின் கேப்டனிடம், இந்திய கேப்டனுடன் கைகுலுக்க வேண்டாம் என போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் கூறியது, ஐ.சி.சி மற்றும் எம்.சி.சி. கிரிக்கெட் விதிமுறைகளுக்கு எதிரானது. கைகுலுக்கும் நடைமுறைக்கு தடைவிதித்து ஒருதலைபட்சமாக செயல்பட்ட பைகிராப்ட்டை உடனடியாக ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் போர்க்கொடி தூக்கியது. ஆனால் அவர்களின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்ததால், 2-வது முறையாக மீண்டும் கடிதம் எழுதியது.
இந்த நிலையில் ஐ.சி.சி. தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இதனால் தங்கள் அணி வீரர்களை மைதானத்திற்கு செல்லாமல் ஓட்டலிலேயே இருக்கும்படி உத்தரவிட்டனர். இதற்கிடையே, போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் நடந்த சம்பவத்துக்காக பாகிஸ்தான் அணி மேலாளர் மற்றும் கேப்டனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், குறிப்பிட்ட அந்த ஆட்டத்தில் ஆன்டி பைகிராப்ட் நடத்தை விதிமுறையை மீறினாரா? என்பது குறித்து விசாரணை நடத்த தயாராக இருப்பதாக ஐ.சி.சி.யும் உறுதி அளித்தது. மேற்கண்ட தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புறக்கணிப்பு முடிவை கைவிட்டு, யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் ஒரு வழியாக மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். இருப்பினும் போட்டி தொடங்குவதில் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்திற்கான போட்டி நடுவராக ஆன்டி பைகிராப்ட்டே பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.






