ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்


ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்
x

image courtesy:twitter/@ACCMedia1

பாகிஸ்தான் வீரர் மாஸ் சதகத் தொடர் நாயகன் விருதை வென்றார்.

தோகா,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசமும், இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இந்த தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 125 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சாத் மசூத் 38 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் ரிப்பன் மொண்டோல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணியும் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. வங்காளதேச தரப்பில் ரஹ்மன் சோகன் 26 ரன்களும், ரகிபுல் ஹசன் 24 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 3 பந்துகளில் 6 ரன்கள் அடித்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 4 பந்துகளில் 7 ரன் அடித்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அகமது டேனியல் ஆட்ட நாயகனாகவும், மாஸ் சதகத் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

1 More update

Next Story