

தோஹா,
ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடரின் குரூப் பி பிரிவில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதும் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்துள்ளது.
ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 தொடரின் குரூப் பி போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்தது.
இதில், வைபவ் சூர்யவன்ஷி 26 ரன்களும், அபிஷேக் சர்மா 9 ரன்களும், ஆயுஷ் பதோனி 2 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் திலக் வர்மா 113 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா, 102 பந்துகளில் 117 ரன்கள் விளாசினார்.
இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இரண்டு சதங்கள் மற்றும் கடைசி கட்ட அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 332 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து நேபாள அணி 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி உள்ளது.