சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவுப்புக்கு அபராதம் - ஐ.சி.சி. நடவடிக்கை

நடத்தை விதிமுறையை மீறியதாக சூர்யகுமாருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சகிப்சதா பர்ஹான் அரைசதம் அடித்ததும் துப்பாக்கியால் சுடுவது போல் பேட்டை உயர்த்தி காட்டியும், வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் ரசிகர்களை நோக்கி 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது போல் சைகை காட்டியும் கொண்டாடியது சர்ச்சையை கிளப்பியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளித்தது. இது குறித்து போட்டி நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சன் நேற்று விசாரணை நடத்தினார்.
இதில் பாகிஸ்தானில் உள்ள கலாசாரத்தின்படி சுப நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சுடுவது வழக்கமாகும். அதை தான் நான் செய்தேன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று சகிப்சதா பர்ஹான் விளக்கம் அளித்தார். மேலும் கடந்த காலங்களில் இந்திய முன்னாள் கேப்டன்கள் டோனி, விராட் கோலி ஆகியோர் இதேபோன்று கொண்டாடி இருப்பதாகவும் சுட்டிகாட்டினார். இதனால் தண்டனையில் இருந்து தப்பிய அவர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஹாரிஸ் ரவுப்பின் சைகை ஆக்ரோஷமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் இருந்ததாக கூறிய ஐ.சி.சி, அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதத்தை அபராதமாக விதித்தது.
லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிப்பதாக கூறிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்தது. போட்டியின்போது அரசியல் பேசக்கூடாது என்ற நடத்தை விதிமுறையை மீறியதாக அவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் உடனே அப்பீல் செய்துள்ளது.






