

சென்னை,
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றன. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கினாலும், பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்திய மகளிர் அணி நேரடியாக காலிறுதிச் சுற்றில் களமிறங்குகிறது.
காலிறுதி: செப்டம்பர் 18
அரையிறுதி: செப்டம்பர் 20
இறுதிப்போட்டி மற்றும் 3-வது இடத்துக்கான போட்டி: செப்டம்பர் 22
ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்திய ஆண்கள் அணியும் நேரடியாக காலிறுதிச் சுற்றில் இருந்து தனது போட்டியை தொடங்குகிறது.
காலிறுதி: செப்டம்பர் 28
அரையிறுதி: அக்டோபர் 1
இறுதிப்போட்டி மற்றும் 3-வது இடத்துக்கான போட்டி: அக்டோபர் 3
அதே நாளான அக்டோபர் 3-ம் தேதி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற உள்ளது. ஒருவேளை ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால், ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் இந்தியாவின் இரு அணிகள் விளையாடும் சூழல் உருவாகும்.
1998-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதியும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. அன்று இந்திய அணி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற சஹாரா பிரெண்ட்ஷிப் கோப்பைத் தொடரிலும் ஒரே நாளில் விளையாடியது.