இன்ஸ்டாகிராமில் குறைந்தது 150 பேராவது ஆர்சிபி-க்கு எதிராக.. - பென் கட்டிங் பகிர்ந்த சுவாரசியம்

image courtesy:PTI
நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.
சிட்னி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 7 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன.
இதில் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) இந்த முறை புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் அந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று பலர் கூறிவருகின்றனர்.
முன்னதாக 2016-ம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான பென் கட்டிங் இறுதி கட்டத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து 15 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். அத்துடன் பந்துவீச்சிலும் கிறிஸ் கெயில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐதராபாத் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றி ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.
இந்நிலையில் தற்போது பெங்களூரு அணி நடப்பு சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் அவர்களுக்கு எதிராக விளையாட வருமாறு தன்னை தினமும் 150 பேராவது இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்வதாக பென் கட்டிங் சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் இப்பொழுது இன்ஸ்டாகிராமில் என்னுடைய தனிப்பட்ட மெசேஜ்களை பதிவேற்றினால், ஒவ்வொரு நாளும் குறைந்தது 150 பேராவது, 'ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட, ஏதாவது ஒரு அணிக்கு உங்களை மாற்று வீரராக தயார்படுத்திக் கொள்ள முடியுமா?' என்று கேட்கிறார்கள்" என கூறினார்.






