

டர்பன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 390 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மேடின்சன் 48 ரன்களில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 27 ரன்களும், மார்னஸ் லபுசேன் 37 ரன்களும் எடுத்தனர். அலெக்ஸ் கேரி 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடிய மாட் ரென்ஷா அரைசதம் கடந்தார். அதிரடியாக ரன் சேர்த்த அவர், 99 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த நிலையில் கேஷவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்திருந்தபோது தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த ரிக்கிள்டன், இந்த முறை 2 ரன்களில் வெளியேறினார். பெடிங்ஹாம் 46 ரன்கள் எடுத்தார். கேப்டன் பவுமா 1 ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 296 ரன்கள் தேவைப்படும் நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. கடைசி நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 125 ரன்கள் எடுத்துள்ளநிலையில், மார்க்ரம் மற்றும் முல்டர் களத்தில் உள்ளனர்.