

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடுவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய நடுவர் பென் ட்ரெலோவர் இந்தியாவில் நடைபெறும் இரண்டு ரஞ்சி டிராபி போட்டிகளில் நடுவராகச் செயல்பட உள்ளார்.
இதற்குப் பதிலாக, இந்திய நடுவர் பராஷர் ஜோஷி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இரண்டு ஷெபீல்ட் ஷீல்டு போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் கோப்பைப் போட்டியில் நடுவராகப் பணியாற்ற உள்ளார். பென் ட்ரெலோவர் டெல்லி - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடுவராகச் செயல்படுகிறார்.
தொடர்ந்து, மும்பை - ஹரியானா அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் அவர் நடுவராகப் பணியாற்ற உள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 30 போட்டிகள், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 20 போட்டிகள் மற்றும் பிக் பாஷ் லீக்கில் 39 போட்டிகளில் நடுவராகச் செயல்பட்ட அனுபவம் அவருக்கு உள்ளது. மேலும், கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் அமைப்பில் நடுவர் கல்வி அதிகாரியாகவும் அவர் பணியாற்றி வருகிறார். இந்திய நடுவர் பராஷர் ஜோஷி, நவம்பர் 11 முதல் 14ஆம் தேதி வரை காபா மைதானத்தில் நடைபெறும் குயின்ஸ்லாந்து - டாஸ்மேனியா அணிகளுக்கு இடையிலான ஷெஃபீல்ட் ஷீல்டு போட்டியில் தனது பணியைத் தொடங்குகிறார். தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் ஒருநாள் போட்டியிலும், நவம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை சிட்னியில் நடைபெறும் நியூ சவுத் வேல்ஸ் - குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான ஷெஃபீல்ட் ஷீல்டு போட்டியிலும் அவர் நடுவராகச் செயல்பட உள்ளார்.
இரு நாடுகளின் உள்நாட்டுப் போட்டிகளில் நடுவர்கள் பணியாற்றுவதன் மூலம், வெவ்வேறு ஆடுகளச் சூழல்கள் மற்றும் கிரிக்கெட் நடைமுறைகளைப் பற்றிய அனுபவத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.