

ஹாம்ப்ஷயர்,
50 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் எல்லிஸ் பெர்ரி.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹாம்ப்ஷயரில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இப்போட்டியில் ஆடியதன் மூலம், எல்லிஸ் பெர்ரி வரலாற்று மைல்கல்லை எட்டினார்.
35 வயதான எல்லிஸ் பெர்ரி, 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் முதல் தற்போது நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை வரை அனைத்து தொடர்களிலும் தொடர்ந்து இடம் பெற்று விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து எல்லிஸ் பெர்ரி இதுவரை 6 முறை டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய மகளிர் அணி விளையாடிய 52 உலகக் கோப்பை போட்டிகளில் 50 போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.
ஆண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, 47 போட்டிகளில் விளையாடியதன் மூலம் அதிக டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை வைத்திருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் தொடக்கத்திலேயே அந்த சாதனையை சமன் செய்த எல்லிஸ் பெர்ரி, தற்போது 50 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டி புதிய உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.