

ராவல்பிண்டி,
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பெஷாவர் சல்மி அணியின் கேப்டன் பாபர் அசாம் அதிரடி சதம் விளாசி பல்வேறு உலக சாதனைகளை தகர்த்துள்ளார்.
52 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த பாபர் அசாம், தனது முழு இன்னிங்ஸிலும் ஒரே ஒரு 'டாட் பால்' (Dot Ball) மட்டுமே விளையாடினார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட பந்துகளைச் சந்தித்து, வெறும் ஒரு டாட் பால் மட்டுமே விளையாடிய முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
மேலும், இது அவரது 12-வது டி20 சதம் ஆகும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லுக்கு (22 சதங்கள்) அடுத்தபடியாக பாபர் இரண்டாம் இடத்தில் உள்ளார். சுமார் 783 நாட்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் , டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை பூர்த்தி செய்த உலகின் 3-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர், ஆசிய அளவில் விராட் கோலிக்கு (107 அரைசதங்கள்) அடுத்தபடியாக 2-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
மேலும், டி20-ல் 12,000 ரன்களை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன் இந்த சாதனை கிறிஸ் கெயில் வசம் இருந்தது. அவர் 343 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களை எடுத்திருந்தார். இந்தியாவின் விராட் கோலி 360 இன்னிங்ஸ்களுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.