

மிர்புர்,
வங்காளதேசம் -நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 48.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிக் கெல்லி 83 ரன்கள் (102 பந்து, 14 பவுண்டரி) எடுத்தார். மற்ற யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை. வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா 10 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 32 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 35.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தன்சித் ஹசன் (76 ரன், 58 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (50 ரன்) அரைசதம் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்த வங்காளதேசம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 23-ந்தேதி சட்டோகிராமில் நடக்கிறது.