

ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து தவ்ஹித் ஹிரிடாய், லிட்டன் தாஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஹிரிடாய் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் 120 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தனர்.
தொடர்ந்து விளையாடிய வங்காளதேச அணி 101.2 ஓவர்களில் 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.