கடைசி போட்டி அதுதான்... ஓய்வை அறிவித்த முஷ்பிகுர் ரஹீம்

இதனை வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் தமிம் இக்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முஷ்பிகுர் ரஹீம்
Published on: 

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஷ்பிகுர் ரஹீம், 2027 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

தமிம் இக்பால் உருக்கம்

இதனை வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் தமிம் இக்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிம் பேசுகையில், 2027 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக மிர்பூரில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டி அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் இறுதிப் போட்டியாக அமைய உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், முஷ்பிகுருடன் இணைந்து வளர்ந்ததாகவும், இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே காலகட்டத்தில் பயணித்ததாகவும் குறிப்பிட்டார். வங்காளதேச கிரிக்கெட்டுக்கு மைதானத்திலும் அதற்கு வெளியிலும் அவர் அளித்த பங்களிப்பு நீண்ட காலம் நினைவுகூரப்படும் என்றும், அவரது முடிவுக்கு முழு மரியாதை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

லார்ட்ஸில் தொடங்கிய பயணம்

2005-ம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முஷ்பிகுர், இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,062 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 38.80 ஆகும். இதில் 14 சதங்களும், 30 அரைசதங்களும் அடங்கும்.

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையைப் பெற்ற அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வங்காளதேச பேட்டர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் வங்காளதேச வீரர் ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான 219 ரன்களும் அவரது பெயரிலேயே உள்ளன.

ஒருநாள், டி20

முஷ்பிகுர் ஏற்கெனவே 2022-ம் ஆண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்தும், 2025-ம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

X