

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள், போட்டிகளை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுடன் அக்டோபர் 15ஆம் தேதி மும்பையில் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 15ஆம் தேதி புதுடெல்லியில் பாராட்டு நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதில் பங்கேற்க பிசிசிஐ அதிகாரிகள் செல்ல வேண்டியிருப்பதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டம், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 20ஆவது சீசனுக்கான திட்டமிடலில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. கடந்த சீசன்களில் ஏற்பட்ட சிக்கல்கள், போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைகள், மைதான வசதிகள் மற்றும் போட்டி நாள் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில கிரிக்கெட் சங்கப் பிரதிநிதிகள், ஒளிபரப்பாளர்கள் ஆகியோர் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் பகிர்ந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது
இந்தக் கூட்டத்தை ஒத்திவைப்பதற்கு பிரதமரின் பாராட்டு நிகழ்ச்சி மட்டுமின்றி, சில ஐபிஎல் தொடர்புடைய தரப்பினரும் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அனைவரும் நேரில் கலந்துகொள்ளும் வகையில் கூட்டத்தை வேறு தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி மற்றும் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.