டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது வீரராக இணைந்த பென் ஸ்டோக்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை 3 வீரர்கள் மட்டுமே படைத்துள்ளனர்.
image courtesy: twitter/@ICC
image courtesy: twitter/@ICC
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளிலேயே 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 371 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் 6 பேர் அரை சதம் அடித்து அசத்தினர்.

பின்னர் 250 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 2-வது நாள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. ஜோஷ்வா டி சில்வா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் மற்றும் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

இந்த இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் லூயிஸ் 14 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்சின் 200-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இவருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான காலிஸ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தனர். தற்போது இவர்களுடன் 3-வது வீரராக ஸ்டோக்ஸ் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com