

லண்டன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை இனியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சேதப்படுத்தியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் தண்டனை பெற்றனர்.
இதற்கிடையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தில், 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து அணியில் இருந்த அனைவருக்கும் தெரிந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
கவாஜாவின் கருத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், அப்போது நடத்தப்பட்ட விசாரணை முறையாக நடைபெற்றதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் பேசப்படுவதால் வீரர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விவகாரத்தில் தொடர்புடைய வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இதற்கு இப்போதாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனால் எந்த தவறும் செய்யாதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஊடகங்களின் அதிகப்படியான கவனத்தால் ஏற்படும் மன அழுத்தம் எப்படி இருக்கும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்” என்றார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அப்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் பதிலளிக்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன என்றும், உண்மையில் என்ன நடந்தது என்பது முழுமையாக தெரிய இன்னும் காலம் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.