நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்: அபிஷேக் சர்மாவுக்கு பஞ்சாப் கேப்டன் பாராட்டு

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஐதராபாத் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்களும், பரப்சிம்ரன் 42 ரன்களும் எடுத்தனர்.
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கி விளையாடியது.இத்தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த நட்சத்திர கூட்டணி இம்முறை ஜொலித்தது. டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடினர். இந்த கூட்டணியை பிரிக்க பஞ்சாப் அணி 171 ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஐதராபாத் அணி தற்போது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பேசிய பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் கூறியதாவது,
உண்மையைச் சொன்னால் இது ஒரு அற்புதமான ஸ்கோர் என்று நினைக்கிறேன். இன்னும் 2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் அவர்கள் இந்த ரன்களை அடித்திருப்பது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது. நாங்கள் சில கேட்சுகளை எடுத்திருக்கலாம், நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை, இவை நாங்கள் முன்னோக்கிச் செல்வதற்குக் கற்றுக்கொண்ட பாடங்கள். நானும், வதேராவும் 230 ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம், ஆனால் பனி எங்களுக்கு (இரண்டாவது இன்னிங்ஸின் போது) அதை கடினமாக்கியது என்று நினைக்கிறேன். அபிஷேக் சர்மாவின் இன்னிங்ஸ் நான் பார்த்த சிறந்த இன்னிங்சில் ஒன்றாகும். என தெரிவித்தார் .






