

மும்பை,
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார். ரோகித்துக்கும் தனக்கும் இருந்த உறவு கேப்டன் - பயிற்சியாளர் என்ற எல்லைக்குள் மட்டும் இருந்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில்,
ரோகித்துக்கும் எனக்கும் இருந்த உறவு வெறும் கேப்டன் - பயிற்சியாளர் உறவு கிடையாது. ரோகித் இந்திய அணிக்கு வந்தபோது நான் அணியில் சீனியர் வீரராக இருந்தேன். அப்போதிலிருந்தே எங்கள் உறவு தொடங்கியது.
ரோகித் என்னை அப்போது முதலே அறிந்தவர். இருவரும் ஒன்றாக விளையாடியிருக்கும்போது, பல விஷயங்கள் மிகவும் எளிதாகிவிடும். அவருடைய எண்ணம் என்ன என்பது எனக்குத் தெரியும்; என்னுடைய எண்ணம் என்ன என்பது அவருக்கும் தெரியும். சில நேரங்களில் எனக்கு ஒரு விதமான எண்ணம் இருக்கலாம். கேப்டனுக்கு வேறு விதமான எண்ணம் இருக்கலாம். ஆனால் இறுதியில் அணியின் நலனுக்கு எது சிறந்த முடிவோ, அதுதான் எடுக்கப்பட வேண்டும்.
அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதைவிட சிறந்த விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. நான் பணியாற்றிய நான்கு கேப்டன்களுடனும் எனக்கு இதே அனுபவம்தான் இருந்துள்ளது. அனைவருடைய கவனமும் இந்திய கிரிக்கெட்டின் மீதே இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.