

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன் னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்ட னர்.
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா 226 மற்றும் 181 ரன் இலக்கை கடைசி ஓவர்களில் விரட்டிப்பிடித்து அசத்தியது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், நமன் திர், அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். பந்து வீச்சு தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2022-ம் ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பிய புவனேஷ்வர்குமார் ரன்களை வாரி வழங்கியுள்ளாரே தவிர எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.
இது தொடர்பாக இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அணிக்கு திரும்பியதில் எனக்கு மிகுந்த அனுதாபம் உண்டு. நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால், 4 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம் செய்யும் போது அவர் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். அது மட்டுமின்றி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அற்புதமாக செயல்பட்டுள்ளார். எனவே இத்தகைய எதிர்பார்ப்புகளை அவர் கவனத்தில் கொள்ளாமல் தவிர்ப்பது அவசியம்.
போட்டி அட்டவணை நெருக்கடியால் போதிய பயிற்சி பெற முடியாத சூழலிலேயே அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டு களம் இறங்க வேண்டியதாகி விட்டது. அவரிடம் திறமையும். அனுபவமும் நிறைய உள்ளன. அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில போட்டிகள் தேவைப்படும். அதற்கு நாம் அவகாசம் கொடுக்க வேண்டும். அவர் அணியில் இணைந்ததில் இருந்து நான் சொல்லும் சில விஷயங்கள் இது தான். 'எந்த இலக்கையும் நிர்ணயித்து அதை நோக்கி ஓடாதீர்கள். இயல்பாக இருங்கள். எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு ஆட்டத்திலும் உங்களது பந்து வீச்சு மேம்படும். வெளியில் இருந்து வரும் விமர்ச னங்களை பற்றி கவலைப்பட வேண்டாம். இயல்பாக இருங்கள். ஒன்றிணைந்து செயல்படுங்கள் என்பது தான்' என்றார்.