

மும்பை
வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம் பெறுகிறார்.
இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. வருகிற 22-ந்தேதி தொடங்கி தொடர்ந்து 5 போட்டிகள் நடைபெறும். இதுதவிர, 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இதற்கான இந்திய அணியில் விளையாட, வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் அழைக்கப்பட்டு உள்ளார்.
இதில், புவனேஸ்வருக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டால், 2022-ம் ஆண்டு அடிலெய்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடியதற்கு பின்னர் விளையாடும் முதல் சர்வதேச போட்டியாக அது இருக்கும்.
அதன் பின்னர் ஐ.பி.எல்.லில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர், 31 போட்டிகளில் 45 விக்கெட்டுகளை எடுத்து, அந்த அணி, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து இரு கோப்பைகளை வெல்வதற்கு உதவினார்.
அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடி, மொத்தம் 294 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவருக்கு, சர்வதேச போட்டிகளில் 300-வது விக்கெட்டை கைப்பற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.
நடப்பு ஆண்டு ஐ.பி.எல்.லில் 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.