

நியூடெல்லி,
ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தலைமையில், இந்திய அணி களமிறங்க உள்ளது.
2026-ம் ஆண்டுக்கான ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில், ஒரு அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே களமிறங்குவர்.
இதில் இந்திய அணியின் கேப்டனாக அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஐ.பி.எல். தொடரில் தங்களது திறமையை வெளிப்படுத்திய பல முன்னணி வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
1. புவனேஷ்வர் குமார் – கேப்டன்
2. க்ருனால் பாண்டியா
3. ஷஷாங்க் சிங்
4. ராகுல் திவேதியா
5. நிதிஷ் ராணா
6. ராகுல் திரிபாதி
7. டி. நடராஜன்
இந்திய அணியில் பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். க்ருனால் பாண்டியா, ராகுல் திவேதியா உள்ளிட்ட ஆல்ரவுண்டர்கள் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.
அதேபோல், ஷஷாங்க் சிங், நிதிஷ் ராணா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் அதிரடி பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களாக உள்ளனர். புவனேஷ்வர் குமார் மற்றும் டி.நடராஜன் ஆகியோரின் வேகப்பந்து வீச்சும் இந்திய அணிக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
6 வீரர்கள் மட்டுமே களமிறங்கும் குறுகிய வடிவிலான போட்டி என்பதால், ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறும். இந்த நிலையில், புவனேஷ்வர் குமார் தலைமையிலான இந்திய அணி ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.