பார்டர் - கவாஸ்கர் கோப்பை: கான்ஸ்டாஸ் உடனான மோதலின்போது கூறியது இதுதான் - பும்ரா விளக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின்போது பும்ரா - கான்ஸ்டாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
image courtesy:twitter/@ICC
image courtesy:twitter/@ICC
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது. இந்த தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த பும்ரா என்னப்பா இது.... என்பது போல் இரு கைகளையும் விரித்தபடி கேட்க, எதிர்முனையில் நின்ற இளம் பேட்ஸ்மேன் கான்ஸ்டாஸ் அவரை ஏதோ சொல்லி சீண்டினார்.

இதனால் கோபமடைந்த பும்ரா பதிலுக்கு வார்த்தைகளை உதிர்த்தார். பிறகு நடுவர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடைசி பந்தில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் பும்ரா நேராக கான்ஸ்டாஸ் அருகே ஓடி வந்து ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடினர்.

இந்நிலையில் அந்த தருணத்தில் கான்ஸ்டாசிடம் என்ன சொன்னீர்கள்? என்று சமீபத்திய நிகழ்ச்சியில் பும்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பும்ரா, "நீங்கள் வேறு ஏதாவது உணர்ந்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. அந்த தருணத்தில் அவரிடம் அனைத்தும் நன்றாக இருக்கிறதா? உங்களுடைய அம்மா நலமா? வீட்டில் அனைவரும் நலமா? என்று கேட்டேன். அதற்கு ஆம் நலம் என்று அவர் சொன்னார். சரி பவுலிங் செய்கிறேன் என்று அவரிடம் மீண்டும் சொன்னேன். வெளியில் உள்ள நீங்கள் அதை வேறு மாதிரி எடுத்துக் கொண்டிருக்கலாம். வார்த்தைகள் இல்லாததால் சில தவறான தொடர்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

பொதுவாக போட்டி நெருக்கமாக செல்லும்போது இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். எங்களைப் போலவே அவர்களும் கொஞ்சம் நேரத்தை வீணடிக்க முயற்சி செய்தார்கள். நாங்கள் அவர்கள் மீது அழுத்தத்தைப் போட முயற்சித்தோம். ஆனால் அந்த நேரத்தில் நடந்தது சரியான எடுத்துக்காட்டு கிடையாது. அனைத்து நேரங்களில் நானும் கோபப்பட மாட்டேன். ஆனால் சில நேரங்களில் இப்படி நடக்கும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com