

கிறைஸ்ட்செர்ச்,
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரின் ஆட்டத்தை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் 70 ரன்களும், பெவன் ஜேக்கப்ஸ் 58 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாறியது.
இந்திய அணி தோல்வியைசந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இணைந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டிக்குப் பிறகு தனது சமூக வலைதளத்தில் கம்பீர் வெளியிட்ட பதிவில், இளம் வீரர்கள் தங்களது திறமையையும் பொறுப்பையும் வெளிப்படுத்தியதை பாராட்டும் வகையில் “Boys becoming men” என்று குறிப்பிட்டார்.
நெருக்கடியான சூழலில் விக்கெட்டுகளை இழந்தபோதும் நம்பிக்கையை இழக்காமல் போராடிய இந்திய வீரர்களின் ஆட்டம் இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக, திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வருகிற 27-ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.