

ஹாமில்டன்,
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வெற்றியை கொண்டாடும் வகையில் கவுதம் கம்பீர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செட்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 61 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 50 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் சைபெர்ட் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். கிளென் பிலிப்ஸ் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார்.
இவர்களின் அதிரடியால் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றாலும், முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி பெற்ற வெற்றிகள் தொடரைக் கைப்பற்ற உதவின. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றது.
இந்தத் தொடர் வெற்றியை அணியின் ஒற்றுமைக்கும் கூட்டுமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில், “ஒன்றாக இணைந்தோம். ஒன்றாக வெற்றி பெற்றோம். எப்போதும் இந்தியாவுக்காக” என்று குறிப்பிட்டுள்ளார்.