

மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இந்த போட்டி பாக்சிங் டே என்று பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தொடங்கியது.
ஆஸ்திரேலியா அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அவரைத்தொடர்ந்து மேத்யூ வேட் 30 ரன்களும், ஸ்டிவன் சுமித் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 38 ரன்களும், மர்னஸ் 48 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவர்களைத்தொடர்ந்து கேமரான் கீரின் 12 ரன்களும், டிம் பெய்ன் 13 ரன்களும், ஸ்டார்க் 7 ரன்னும், நாதன் லியான் 20 ரன்களும், பேட் கம்மின்ஸ் 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 72.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ரன் ஏதுவும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். தற்போது புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர்.