இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் பும்ரா விளையாட வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

image courtesy:PTI
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
புதுடெல்லி,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அந்த போட்டியில் விளையாடுவது அவசியம்.
ஆனால் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் கடைசி இரண்டு போட்டியில் அவர் எந்த போட்டியில் விளையாடுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளிலுமே அவர் விளையாடினால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அணில் கும்ப்ளே தான் தேர்வுக்குழுவில் ஒரு முக்கிய நிர்வாகியாக இருந்திருந்தால் நிச்சயம் பும்ராவை அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வைக்க முடிவு செய்வேன் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணிக்கு நான்காவது போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஏனெனில் நான்காவது போட்டியில் ஒருவேளை நாம் தோற்கும் பட்சத்தில் இந்த தொடரை இழந்து விடுவோம். எனவே என்னை பொறுத்தவரை நான்காவது போட்டியில் பும்ரா விளையாடியாக வேண்டும். அதுமட்டும் இன்றி கடைசி போட்டியிலும் அவரை நான் விளையாட வைப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






