

சென்னை,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற 31வது ஆட்டத்தில் கனடா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கனடா அணியின் கேப்டன் திலபிரீத் பஜ்வா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கனடா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அந்த அணியில் யுவ்ராஜ் சம்ரா சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்ட அவர் சதமடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது. நியூசிலாந்து அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இறப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிலிப்ஸ் 76 ரன்களும் , ரச்சின் ரவீந்திரா 59 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியில் சதமடித்ததால் யுவ்ராஜ் சம்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் சதம் அடித்த உறுப்பு நாட்டை சேர்ந்த முதல் வீரர் இவர் தான். டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஒட்டுமொத்த உலகக் கோப்பை போட்டிகளில் (50 ஓவர் மற்றும் டி20 சேர்த்து) சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.
இப்போது அவரது வயது 19 ஆண்டு 141 நாள். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் தனது வயது 20 ஆண்டு 196 நாளில் சதம் அடித் ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.