

பாட்னா,
2026-27-ம் ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு பீகார் அணியின் கேப்டனாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
2026-27-ம் ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், 17 பேர் கொண்ட பீகார் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும், சூரஜ் காஷ்யப் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 14-ம் தேதி இந்தூரில் நடைபெறும் முதல் போட்டியில் பீகார் அணி சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் ரயில்வேஸ் அணியுடன் மோதுகிறது.இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே வைபவ் அணியின் கேப்டனாக செயல்படுவார்.
இதற்குப் பிறகு, நவம்பர் 19 முதல் 29-ம் தேதி வரை கத்தாரில் நடைபெறவுள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா 'ஏ' அணிக்காக வைபவ் விளையாட உள்ளார். இதற்காக அவர் பீகார் அணியில் இருந்து விலகி இந்தியா 'ஏ' அணியுடன் இணையவுள்ளார்.
ஏற்கெனவே இளம் வயதிலேயே ஐ.பி.எல். மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, தற்போது மாநிலத்தின் சீனியர் அணியை வழிநடத்தும் புதிய பொறுப்பு கிடைத்துள்ளது.