கரீபியன் பிரீமியர் லீக்: கயானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அன்டிகுவா

டாஸ் வென்ற அன்டிகுவா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
கரீபியன் பிரீமியர் லீக்: கயானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அன்டிகுவா
Published on

பார்படோஸ்,

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் குவாலிபையர் சுற்று ஆட்டத்தில் கயானாவை வீழ்த்தி அன்டிகுவா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கரீபியன் பிரீமியர் லீக்

14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன

குவாலிபையர்

கரீபியன் பிரீமியர் லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றான குவாலிபையர் சுற்றுக்கு கயானா அமேசான் வாரியர்ஸ், அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

கயானா அமேசான் வாரியர்ஸ் - அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ்

இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றின் முதல் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணிகள் மோதின.

கயானா 76 ரன்களுக்கு ஆல் அவுட்

இப்போட்டியில் டாஸ் வென்ற அன்டிகுவா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கயானா வீரர்கள் அன்டிகுவா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் கயானா 15 ஓவரில் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிலிப்ஸ், ஷாய் ஹோப் அதிகபட்சமாக தலா 16 ரன்கள் சேர்த்தனர்.

சிறப்பாக பந்து வீசிய அன்டிகுவா வீரர்கள் சதாப் கான், சப்யான் மொகியும் அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அன்டிகுவா வெற்றி

இதனை தொடர்ந்து 77 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய அன்டிகுவா 5.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கயானாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அன்டிகுவா அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு அன்டிகுவா முன்னேறியது. அதிரடியாக ஆடிய அன்டிகுவா தொடக்க வீரர் கார்ன்வெல் 16 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 2வது குவாலிபையர் ஆட்டத்தில் ஜமைக்கா - கயானா மோதுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com