புதிய பெயரில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் - வெளியான தகவல்

கோப்புப்படம்
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் மறு உருவமாக 'உலக கிளப் சாம்பியன்ஷிப் தொடர்' 2026-ல் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
தற்போது சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளை விட பிரான்ச்சைஸ் தொடர் டி 20 போட்டிகளுக்குதான் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இதனால் விரைவில் கால்பந்து போல கிரிக்கெட்டும் அதிகளவில் லீக் தொடர்களாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, இந்தியா என அனைத்து நாடுகளும் தனித்தனியாக டி 20 தொடர்களை நடத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐ.பி.எல் தொடர் பணமழை கொட்டும் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த லீக் தொடர்களின் வெற்றி பெறும் அணிகளை ஒன்று சேர்த்து உலக டி 20 கிளப் தொடர் ஒன்றை நடத்தும் முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தொடர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என்ற பெயரில் நடத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இப்போது மீண்டும் அந்த தொடரை உலக டி 20 கிளப் தொடர் என்ற பெயரில் 2026-ம் ஆண்டு முதல் நடத்தப் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் ஐ.பி.எல் தொடர், பாகிஸ்தானின் பி.எஸ்.எல் தொடர், ஆஸ்திரேலியாவின் பி.பி.எல் தொடர், தென் ஆப்பிரிக்காவின் எஸ்.ஏ. 20 ஓவர் லீக், இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் போன்ற உலகெங்கிலும் உள்ள பிரான்சைஸ் தொடர்களில் பட்டம் வென்ற அணிகளை ஒருங்கிணைத்து இந்த தொடர் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. .
இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015-ம் ஆண்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2009 - 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






