

பர்கிங்ஹாம்,
இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி வகித்துவரும் அனில் கும்பிளேவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மிகவும் முக்கியமான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் இந்த வேளையில், பயிற்சியாளர்- கேப்டன் இடையே மோதல் என்ற செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இருவருக்கும் இடையே உள்ள மோதல் இந்திய அணியின் வெற்றியை பாதித்துவிடுமோ? என்ற அச்சமும் ரசிகர்கள் மனதில் எழாமல் இல்லை. இந்திய அணியில் இது போன்ற எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய இணைச்செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறியிருந்தார். பர்கிங்ஹாமில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இந்த தகவலை தெரிவித்தார்.
இது குறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளே, கேப்டன் விராட்கோலி இடையே கருத்து வேறுபாடு இருப்பது போல் எனக்கு எதுவும் தெரியவில்லை. கற்பனை மற்றும் யூகத்தின் அடிப்படையில் இந்த செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நெருப்பு இல்லாமல் புகை வருமா? என்று கேட்கிறீர்கள். புகையை நான் பார்க்கவில்லை. எனது பயணத் திட்டத்தை (இங்கிலாந்து பயணம்) என்னை விட நீங்கள் அதிகம் அறிந்து வைத்து இருப்பது வியப்பாக இருக்கிறது. பயிற்சியாளர் தேர்வு விஷயத்தில் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. நமது அணி வீரர்கள் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள். புதிய பயிற்சியாளர் தேர்வு விவகாரத்தை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பார்த்து கொள்ளும் என கூறினார்.
ஆனால், பயிற்சியின் போது பயிற்சியாளர் அனில் கும்பிளே சில உபகரணங்களுடன் வீரர்களை அணுகியதாகவும் அப்போது உடனடியாக விராட் கோலி அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் நிலவும் கருத்து வேறுபாடு எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும் என்பது பெரிய விவாதமாகியுள்ளது.