சாம்பியன்ஸ் டிராபி: முதல் பாகிஸ்தான் வீரராக வரலாறு படைத்த குஷ்தில் ஷா

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் குஷ்தில் ஷா 69 ரன்கள் அடித்தார்.
கராச்சி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
கராச்சியில் நேற்று அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 118 ரன்களும், வில் யங் 107 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களம் கண்ட பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 69 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்கே, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லாதம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தரப்பில் களமிறங்கிய குஷ்தில் தா 69 ரன்கள் அடித்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 7 அல்லது அதற்கும் கீழ் வரிசையில் களமிறங்கி 50+ ரன்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் அப்துல் ரசாக் 48 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.






