

சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் ருதுராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே இருவரும் அதிரடியாக விளையாடினர். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர்.
அரைசதம் கடந்த பிறகு சஞ்சு சாம்சன் டெல்லி அணி பந்துவீச்சாளர்களை மிரள விட்டார். ஆயுஷ் மாத்ரே 59 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா நிதானமாக ஆடி 41 ரன்கள் எடுத்த நிலையில், காம்போஜ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
தொடர்ந்து வந்த சமீர் ரிஸ்வி(6 ரன்கள்), அக்சர் பட்டேல்(1 ரன்), டேவிட் மில்லர்(17 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் கடந்தார். இந்நிலையில் ஜேமி ஓவர்டன் வீசிய 19-வது ஓவரில் ஸ்டம்ப்ஸ்(60 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி பதிவு செய்துள்ள முதல் வெற்றி இதுவாகும்.
மேலும், இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஜேமி ஓவர்டன் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது, குர்ஜப்நீத் சிங் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.
அதோடு, சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை அணி, இன்று அந்த சோகத்திற்கு முடிவு கட்டியுள்ளது. இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.