ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை

சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை
Published on

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது.

இதனால் சென்னை அணிக்கு இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோதுகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ஷேக் ரஷீத் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரேவுடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார்.

இதில் சாம் கர்ரன் 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ரன்கள்(4 பவுண்டரிகள்) அடித்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ஜடேஜா(21 ரன்கள்) கமிந்து மெண்டிஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

அரைசதத்தை நோக்கி முன்னேறிய டெவால்டு பிரெவிஸ், 25 பந்துகளில்(1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) 42 ரன்கள் குவித்த நிலையில், ஹர்ஷல் பட்டேல் வீசிய 13-வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். சிவம் துபே 12 ரன்களிலும், கேப்டன் தோனி 6 ரன்களிலும் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா(22 ரன்கள்) உதத்கட் வீசிய கடைசி ஓவரின் 5-வது பந்தில் கேட்ச் ஆனார்.

இறுதியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com