

கிறைஸ்ட்சர்ச்,
இந்தியா-நியூசிலாந்து இடையே வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்சர்ச்சில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் அளித்த பேட்டியில், 'வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஆடுகளம் வழக் கமாக தொடக்கத்தில் மிகவும் பசுமையாக தெரியும். ஆனால் 5 நாட்களில் ஆடுகளத்தன்மை இவ்வளவு மெதுவாகவும், பந்து தாழ்ந்து செல்லும் வகையிலும் மாறும் என எதிர்பார்க்கவில்லை. இப்போது கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்திற்கு வந்துள்ளோம். இங்கு பந்து நன்றாக எழும்பி வரும் (பவுன்ஸ்) என்று நம்புகிறேன். எங்களில் பலர் கடந்த 10 ஆண்டுகளில் இங்கு நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளோம்.
எனவே இங்குள்ள சூழல் எப்படி இருக்கும் என்பதை அறிவோம். இது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு அழகான ஒரு மைதானம். இங்கு சிறப்பாக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். முதலாவது டெஸ்டில் வெற்றிக்காக இந்திய பவுலர்கள் கடைசி நாளில் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்பதை பார்த்து இருப்பீர்கள். இது பந்து வீச்சாளர்களின் உடலுக்கு மிகுந்த சோர்வை தரும். மேலும் இது முக்கியமான ஒரு தொடர். இதனால் அவர்கள் கைகுலுக்கி ஆட்டத்தை முன்கூட் டியே முடிக்க முன்வந்த போது, மகிழ்ச்சியுடன் சம்மதித்தோம்' என்றார்.
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.