

புதுடெல்லி,
ஐபிஎல் 2027 சீசனுக்கு தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சைராஜ் பஹுதுலேவுக்கு மாற்று வீரரைத் தேடுவது மட்டுமின்றி, மேலும் இரண்டு பயிற்சியாளர்களும் அணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ரிக்கி பாண்டிங் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் பயிற்சிக் குழுவில் குறைந்தது மூன்று புதிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ்-ம் அணியை விட்டு வெளியேறியுள்ளார்.
இருவரும் சமீபத்தில்தான் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்திடம் தங்களது முடிவை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாடின் மற்றும் ஹோப்ஸ் இருவருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் புதிய பொறுப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கான மாற்று பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பணியை பஞ்சாப் கிங்ஸ் அணி தொடங்கியுள்ளது. புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு தற்போது தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிடம் உள்ளது.