டெஸ்ட் கிரிக்கெட் - 130 ஆண்டுகளை கடந்தும் முறியடிக்கப்படாத உலக சாதனை

அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் - 130 ஆண்டுகளை கடந்தும் முறியடிக்கப்படாத உலக சாதனை
Published on

சென்னை,

கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் உருவாகி, பின்னர் முறியடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் சில சாதனைகள் மட்டும் காலத்தை கடந்து நிலைத்து நிற்கும். உதாரணமாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே, ஜிம் லேக்கர் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோரின் பெயர்களை கூறலாம். அதேபோல், 130 ஆண்டுகளுக்கும் மேலாக யாராலும் நெருங்க முடியாத ஒரு சாதனை இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லோஹ்மான் பெயரில் இன்று வரை நிலைத்து நிற்கிறது.

வெறும் 7 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்

1896-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்த வரலாற்று சாதனை நிகழ்ந்தது. தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜார்ஜ் லோஹ்மான் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 9.4 ஓவர்கள் மட்டுமே வீசி, அதில் 6 ஓவர்களை மெய்டனாக மாற்றி, 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், மிகக் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற பெருமை இன்றளவும் அவரிடமே உள்ளது.

மற்றொரு உலக சாதனையும் லோஹ்மான் வசம்

ஜார்ஜ் லோஹ்மானின் சாதனை அத்துடன் முடிவடையவில்லை. அதே தொடரின் இரண்டாவது டெஸ்ட்டில் அவர் மீண்டும் அசத்தினார். அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை (9/28) வீழ்த்தினார். ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில், மிகக் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற சாதனையையும் அவர் இன்றளவும் தக்கவைத்துள்ளார்.

16 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகள்

தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் வெறும் 18 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜார்ஜ் லோஹ்மான், மொத்தம் 112 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது 16-வது டெஸ்ட் போட்டியிலேயே 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி, அக்காலத்தில் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

கிரிக்கெட் வரலாற்றில் அழியாத பெயர்

மிகவும் பிரகாசமான எதிர்காலம் கொண்டிருந்த ஜார்ஜ் லோஹ்மான், உடல்நலக் குறைவு காரணமாக வெறும் 36 வயதிலேயே காலமானார். ஆனால் 130 ஆண்டுகளைக் கடந்தும் முறியடிக்கப்படாத அவரது 8/7 மற்றும் 9/28 சாதனைகள், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மிகப் பெரிய பந்துவீச்சு சாதனைகளாக உள்ளன. கிரிக்கெட் இருக்கும் வரை ஜார்ஜ் லோஹ்மானின் பெயரும் அவரது சாதனைகளும் வரலாற்றில் அழியாமல் நிற்கும் என்பது உறுதி.

X

Daily Thanthi
www.dailythanthi.com