தொடரிலிருந்து வெளியேறிய ’சிஎஸ்கே’... அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

தொடர்ந்து மூன்றாவது சீசனாக முதல் நான்கு இடங்களுக்குள் வர முடியாமல் சிஎஸ்கே வெளியேறியுள்ளது.
தொடரிலிருந்து வெளியேறிய ’சிஎஸ்கே’... அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் 2026 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. சிஎஸ்கே இந்த சீசனில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்த கசப்பான சம்பவத்துடன் மேலும் ஒரு அடி சிஎஸ்கேவுக்கு விழுந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆடும் லெவனில் இருந்த மற்ற வீரர்கள் மற்றும் இம்பாக்ட் பிளேயர் (Impact Player) ஆகியோருக்கும் தலா 6 லட்சம் ரூபாய் அல்லது அவர்களது போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் (எது குறைவோ அது) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் சென்னை அணி செய்யும் இரண்டாவது 'ஸ்லோ ஓவர்-ரேட்' தவறு இதுவாகும்.

இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அவர்களின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு அதிகாரபூர்வமாக பறிபோனது. ஐந்து முறை சாம்பியனான சென்னை அணி, கடந்த 2023-ல் கோப்பையை வென்ற பிறகு, தொடர்ந்து மூன்றாவது சீசனாக முதல் நான்கு இடங்களுக்குள் வர முடியாமல் வெளியேறியுள்ளது.

Also Read
பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்... 2027 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு
தொடரிலிருந்து வெளியேறிய ’சிஎஸ்கே’... அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ், இந்த சீசனின் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 229/4 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் ஆடிய சென்னை அணியை 140 ரன்களுக்கு சுருட்டி, அபார வெற்றியைப் பதிவு செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com