

லண்டன்,
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற வரலாற்று சாதனையை இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா படைத்து உள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 170 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இலக்கை துரத்தியநிலையில், 10-வது ஓவரை வீசிய தீப்தி முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் பெத் மூனியின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், 356-வது சர்வதேச விக்கெட்டை பதிவு செய்த அவர் ஜுலன் கோஸ்வாமியின் நீண்டகால சாதனையை முறியடித்தார்.
இந்த போட்டிக்கு முன்பு, மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஜுலன் கோஸ்வாமியின் 355 விக்கெட்டுகள் என்ற சாதனையை சமன் செய்ய தீப்திக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. தற்போது பெத் மூனியின் விக்கெட்டை கைப்பற்றி சாதனையை முறியடித்துள்ளார்.
தற்போது தீப்தி சர்மா 279 சர்வதேச போட்டிகளில் 356 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 6 டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகள், 124 ஒருநாள் போட்டிகளில் 166 விக்கெட்டுகள் மற்றும் 149 டி20 சர்வதேச போட்டிகளில் 168 விக்கெட்டுகள் அடங்கும்.
மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலில் தீப்தி சர்மா (356), ஜுலன் கோஸ்வாமி (355) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி (336), இங்கிலாந்தின் கேத்தரின் ஷிவர்-பிரண்ட் (335), இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (333) மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் (323) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.