இந்தியாவுக்கு எதிரான தோல்வி: பாக்.கேப்டன் கூறியது என்ன..?

ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த தோல்விக்குப்பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா அளித்த பேட்டியில், நாங்கள் இன்னும் ஒரு சரியான ஆட்டத்தை விளையாடவில்லை. ஆனால் நாங்கள் அதை நோக்கி செல்கிறோம். இது ஒரு சிறந்த ஆட்டம். ஆனால் பவர் பிளேயில் அவர்கள் (இந்திய அணி) ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்து விட்டனர். நாங்கள் பேட்டிங் செய்கையில் 10 ஓவர்கள் முடிந்த பிறகு இருந்த நிலையை பார்க்கும்போது, 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். 170-180 ஒரு நல்ல ஸ்கோர்தான். ஆனால் பவர் பிளேயில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள், அதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இதுதான் டி20 ஆட்டங்களில் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான அடுத்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com